அதிகாரம் 45

1 என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2 எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
8 தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
10 குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11 அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12 தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13 ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
14 சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
16 உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
17 உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.