சங்கீதம்
அதிகாரம் 33
1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
9 அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.