சங்கீதம்
அதிகாரம் 108
1 தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.
3 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
4 உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,
6 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
9 மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.
10 அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா?
13 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.