சங்கீதம்
அதிகாரம் 111
1 அல்லேலுூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
2 கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
4 அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6 ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால் தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
7 அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.