அதிகாரம் 52

1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
3 விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
8 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.
9 எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.
10 எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
12 நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
13 இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
15 அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.