ஏசாயா
அதிகாரம் 36
1 எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
2 அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
3 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
4 ராப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
5 யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
6 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.
7 நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
8 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
9 கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
10 இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
11 அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
12 அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
13 ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
14 எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டன்.
15 கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
16 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.
17 நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
18 கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?
19 ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
20 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
21 அவர்களோ அவனுக்கு ஒருவார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
22 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும், வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ராப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.