அதிகாரம் 9

1 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.
2 நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்தி வைத்தாயாகில்,
3 கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.
4 கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
5 மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
6 மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
7 பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
8 அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
9 அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.
10 அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
11 அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.
12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
14 விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.
15 நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
16 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
17 நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?
18 எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.
19 இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருக ஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்
20 பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.
21 எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
23 அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
24 கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
25 எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
26 இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
27 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து; நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.
28 இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.
29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
30 ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
31 அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
32 கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
33 மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
34 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
35 கர்த்தர் மோசேயைக் கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.