யாத்திராகமம்
அதிகாரம் 8
1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
2 நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
3 நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
4 அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் ஊழியக்காரர் எல்லார் மேலும் வந்து ஏறுமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
5 மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
6 அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
7 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
9 அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
11 தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலேமாத்திரம் இருக்கும் என்றான்.
12 மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
13 கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
14 அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றமெடுத்தது.
15 இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
16 அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.
17 அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையிலிருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசமெங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
18 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.
19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
20 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
21 என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
22 பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,
23 என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
24 அப்படியே கர்த்தர் செய்தார்; மகாதிரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
25 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.
26 அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாய் இருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
27 நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.
28 அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.
29 அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.
30 மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
31 அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.
32 பார்வோனோ இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.