ஓர் காட்டில் கொடிய சிங்கமொன்று வாழ்ந்து வந்தது. அது அக் காட்டிலுள்ள விலங்குகளை நாளிற்கு ஒன்று வீதம் தனக்கு இரையாக வரவேண்டும் என கட்டளை இட்டது. இதனை மீற முடியாத அப்பாவி விலங்குகள் தாமாகவே சென்று சிங்கத்திற்கு இரையாகின. ஒரு நாள் முயலை இரையாக அனுப்பினார்கள். முயல் மிகவும் கவலையுடன் செல்லும் போது ஓர் கிணற்றை கடந்து சென்றது. அக் கிணற்றில் தன் உருவம் தெரிவதை அறிந்தது. அப்போது அதற்கு யோசனை தோன்றியது. மிகவும் பதற்றத்துடன் சிங்கத்திடம் சென்றது. சிங்கம் "என்னவாயிற்று" என வினவியது. அப்போது முயல் "தங்களை போலவே ஓர் சிங்கம் தான் தான் இக் காட்டின் ராஜா நீ எனக்கு இரையாக வேண்டியவன் எனக் கூறி என்னை பிடிக்க முயன்றது. நான் தப்பி உங்களிடம் வந்தேன்" என கூறியது. சிங்கம் கோபத்துடன் "எங்கே உன்னை பிடிக்க முயன்றவன்?" எனக் கேட்டு கர்ச்சித்தது. "வாருங்கள் ராஜா" என கூட்டிச் சென்று கிணற்றைக் காட்டியது. இதனுள்ளே தன்னைப்போல இன்னொருவன் இருப்பதாக எண்ணிய சிங்கம் கிணற்றினுள் பாய்ந்து உயிரை விட்டது. காட்டு விலங்குகள் நிம்மதியாக வாழ்ந்தன.
படிப்பினை - புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.