வெளிப்படுத்தின விசேஷம்
அதிகாரம் 19
1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
3 மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
6 அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
14 பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.
15 புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
17 பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.