1 கொரிந்தியர்
அதிகாரம் 16
1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
2 நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
3 நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
4 நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
5 நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
6 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
7 இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
8 ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
9 ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
10 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
11 ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
12 சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.
13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
16 இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
18 அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
19 ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
20 சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
21 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
22 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
23 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.
24 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.