அதிகாரம் 11

1 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்..
3 இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4 ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.
5 அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6 இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவில் போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8 பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 நான் உங்களை அதற்குள் இராதபடிக்கு புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10 பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
11 இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12 என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13 நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.
14 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15 மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.
16 ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.
17 ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
18 அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19 அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20 அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
21 ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23 கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
25 கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.