புலம்பல்
அதிகாரம் 4
1 ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.
2 ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.
3 திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.
4 குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.
5 ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.
6 கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
7 அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
8 இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
9 பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.
10 இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
11 கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.
12 சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
13 அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
14 குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக் கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
15 விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.
16 கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.
17 இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
18 நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.
19 எங்களைப் பின் தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின் தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.
20 கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
21 ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க் கிடப்பாய்.
22 சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.