அதிகாரம் 49

1 அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
2 ஆகையால், இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப் போவான்.
4 எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமை பாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்கு கரைந்துபோகிறது.
5 இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
6 அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?
8 தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன் மேல் வரப்பண்ணுவேன்.
9 திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
10 நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.
11 திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.
13 போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.
15 இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டைபண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
16 கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.
18 சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.
19 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
21 அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
22 இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
23 தமஸ்குவைக் குறித்துச் சொல்வது; ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்து போகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.
24 தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
25 சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்ப விடப்படாமற்போயிற்றே!
26 ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
27 தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
28 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.
29 அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.
30 காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.
31 அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு வாசல்களுமில்லை, தாழ்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 ஆத்தோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே, தங்குவதுமில்லையென்கிறார்.
34 யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
35 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
36 வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
37 நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
38 என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.