அதிகாரம் 18

1 பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.
2 மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
4 மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல;
6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
8 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
11 ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.
12 அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13 காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
14 மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17 தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
19 அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.
20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.
24 சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.