அதிகாரம் 11

1 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
2 உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,
3 அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,
4 எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,
5 நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும்,
6 பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
7 கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.
8 ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
9 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.
10 நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.
11 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;
12 அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,
14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,
15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார்.
16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.
17 இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.
18 ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும் படிக்கு,
19 நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
20 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.
21 அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.
22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,
23 கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.
24 உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.
25 உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார்.
26 இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
28 எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
29 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.
30 அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?
31 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக் கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.
32 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.