எண்ணாகமம்
அதிகாரம் 8
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
5 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
6 நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
7 அவர்களைச் சுத்திரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள்.
8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி,
9 லேவியரை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.
10 நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.
11 லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.
12 அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,
13 லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
14 இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
15 இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.
16 இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
17 இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
18 பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
19 லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
20 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.
21 லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
22 அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24 லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
25 ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,
26 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.